சட்டத்துக்குப் புறம்பாக மண் திருடிய அதிமுக எம்.எல்.ஏ-வின் குடும்பத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம், லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த தத்தமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரியகுளம் ஏரி உள்ளது. மொத்தம் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், முறையான அனுமதி இல்லாமல், கடந்த சில தினங்களாக இரவில் மணல் அள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மணல் அள்ளுவதற்காக வந்த லாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அந்த லாரிகள் அனைத்தும் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அவருடைய செங்கல் சூளைக்கு மண் அள்ளிச் செல்வதற்காக வந்துள்ளதாக லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சொல்வதைக் கேட்காத பொதுமக்கள், ‘ அரசு அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்கிறீர்களா, அதற்கான சான்றிதழ் இருந்தால் கொடுங்கள்’ எனக் கேட்டனர்.
இதற்கு எந்தப் பதிலும் வராததால், பொக்லைன் இயந்திரம், 5 டிப்பர் லாரிகள், 1 டிராக்டர் என 7 வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனைத் தொடர்புகொண்டனர் லாரி ஓட்டுநர்கள். அதற்குள் அங்கு வந்த வி.ஏ.ஓ வரதராஜனிடம், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘தாசில்தாரை வரச் சொல்லுங்கள்’ எனக் கோஷம் எழுப்பினர். வி.ஏ.ஓ விசாரணை முடிவில், மண் அள்ளுவதற்கு ஊரக வளர்ச்சித் துறை அனுமதி வழங்கியதாகவும், அந்த அனுமதி காலாவதியாகி 15 நாள்கள் ஆனதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அனைத்து வாகனங்களும் சிறுகனூர் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.