சான்றிதழ்: UAரேட்டிங்: 3.75/5வகை: திரில்லர், மர்மம்ரிலீஸ் தேதி: 16 ஜூன் 2022
கதைக்களம்
O 2 திரைப்படம் உடல்நலக்குறைவால் போராடும் குழந்தைக்கும் தாய்க்கும் இடைப்பட்ட பாசப் போராட்டம் பற்றிய கதைவிமர்சனம்
O 2 விமர்சனம்
நாயகி நயன்தாராவின் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக கோயமுத்தூரில் இருந்து கொச்சினுக்கு பேருந்து மூலம் செல்கிறார். செல்லும் வழியில் நிலச்சரிவில் பேருந்து சிக்கிக் கொள்கிறது.
இதில் நயன்தாரா தனது குழந்தை, போலீஸ் அதிகாரி, முன்னாள் எம்.எல்.ஏ, காதலர்கள், பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 9 பேர் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் பேருந்தில் சிக்கிக் கொண்டவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா, கோபம், அக்கறை, பாசம், பரிதவிப்பு உள்ளிட்ட உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். குறிப்பாக மகனுக்காக ஏங்கும் காட்சிகளில் மனதை உருக வைக்கிறார். மகனாக நடித்திருக்கும் ரித்விக், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பேருந்துக்குள் லைட் போடும் காட்சியில் படபட வைக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்திருக்கிறார்.
பேருந்து ஓட்டுனர் ஆடுகளம் முருகதாஸ், முன்னாள் எம் எல் ஏ, காதலர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வருபவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
நிலச்சரிவில் சிக்கிய பேருந்து, ஆக்சிஜனுக்காக போராடும் மனிதர்கள், தாய் மகன் பாசம், இயற்கை வளங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ். பேருந்துக்குள் இருக்கும் நிறைய காட்சிகள் திக் திக் நிமிடங்களாக கொடுத்திருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் ‘O 2’ அவசியம் தேவை.