கர்நாடகாவில் உற்பத்தியாகும் மகதாயி அல்லது மண்டோவி என்றழைக்கப்படும் சிறிய நதி மகாராஷ்ட்ரா வழியாக கோவாவில் கடலில் கலக்கிறது. மொத்தமே 77 கிலோ மீட்டர் தொலைவுதான் ஓடும் இந்த நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கோவா மாநிலங்களுக்கிடையே வேறுபாடு நிலவுகிறது.
கர்நாடகாவின் பெலகாம் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பீம்காட் என்ற இடத்தில் இந்த நதி உற்பத்தியாகிறது. கர்நாடகாவில் 29 கிலோ மீட்டரும் கோவாவில் 53 கிலோ மீட்டரும் ஓடுகிறது. கோவா மாநிலத்துக்கு இந்த நதிதான் முக்கிய நீராதாரம். மர்மகோவா, பனாஜி, பழைய கோவா நகரங்கள் இந்த நதிக்கரையில்தான் அமைந்துள்ளன.
வட கர்நாடகாவின் பெல்காம், பாகல்கோட், தார்வாட், கடக் மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மகதாயி, நதியிலிருந்து 7.56 டிஎம்சி தண்ணீர் எடுத்து பெல்காம் அருகேயுள்ள மலபிரபா அணைக்குக் கொண்டு செல்ல கர்நாடகா அரசு திட்டமிட்டது. இதற்காக காலசா, பாண்டுரி பகுதியில் இரு கால்வாய்களை வெட்டி மகதாயி நதியிலிருந்து தண்ணீரைத் திசை திருப்ப முடிவு செய்து 2002-ம் ஆண்டு எஸ்.எம் கிருஷ்ணா முதல்வராக இருக்கும் போது பணிகளைத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் ஆட்சியிலிருந்த மனோகர் பாரிக்கர் அரசு, உச்சநீதிமன்றத்தில் தடையாணை வாங்கியது.
இதற்கிடையே, 2010ம் ஆண்டு மத்திய அரசு மகதாயி நதிநீர் பங்கீட்டு ஆணையம் அமைத்தது. கர்நாடக அரசு கால்வாய் வெட்டும் பணிகளைத் தொடர அனுமதி கேட்டு மனு அளித்தது. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகளை காரணம் காட்டி கால்வாய் வெட்ட மகதாயி நதிநீர் ஆணையம் அனுமதிக்கவில்லை. தற்போது, கர்நாடகாவின் மனு ஆணையத்தில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, கோவாவில் பாரதிய ஜனதா அரசு மீண்டும் பொறுப்புக்கு வந்தது. கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ளது. மகதாயி நதி விவகாரத்தில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் பேசி, சாதகமான முடிவு பெற்றுத் தருவதாக கர்நாடக மாநில பாரதியஜனதா தலைவர் எடியூரப்பா வாக்களித்தார். ஆனால், வாக்களித்தபடி எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், அமித்ஷா மைசூருவில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று வந்தார். இதையடுத்து, மகதாயி நதி விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசு இரட்டை வேடம் போடுவதாகக் கூறி கர்நாடகாவில் இன்று (25ம்தேதி) கன்னட அமைப்புகள் பந்த் அறிவித்தன.
இதனால் பெங்களூரு, மைசூரு, பெல்காம், ஹூப்ளி, தார்வார்ட், பாகல்கோட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில்கள், கார்கள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மகதாயி நதி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பெங்களூரில் பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போதும், கன்னட அமைப்புகள் பந்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.