ஜெர்மனியின் முனிச் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். காலையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது மிகவும் கடினமான விஷயம். 40 வயது பெஞ்சமின் டேவிட், இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.
தினமும் இசார் நதியில் 2 கி.மீ. தூரம் நீந்தி, தான் வேலை செய்யும் அலுவலகத்தை அடைந்துவிடுகிறார். “நானும் ரயிலில், பேருந்தில், சைக்கிளில் என்று பலவற்றிலும் பயணம் செய்து பார்த்தேன். எவ்வளவு சீக்கிரமாகக் கிளம்பினாலும் தாமதமாகத்தான் அலுவலகம் செல்ல முடிந்தது. அப்போதுதான் நதியில் நீந்திச் செல்லும் முடிவை எடுத்தேன்.
என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல நதியில் இரண்டு கி.மீ. தூரம்தான். தண்ணீர்ப் புகாத பையில் உடை, உணவு போன்றவற்றை எடுத்துக்கொண்டு நீந்துவேன்.
கரையேறி, உடை மாற்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகம் சென்றுவிடுவேன். இப்படி நீந்திச் செல்வதால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நீந்த ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. ஆரம்பத்தில் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் இன்று நான் செய்வது சரியென்று ஒப்புக் கொள்கிறார்கள்.
குளிர் காலத்தில் நீந்துவதுதான் கொஞ்சம் சிரமமானது. அப்போது குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற ஆடைகளையும் ஷூக்களையும் அணிந்துகொள்வேன்” என்கிறார் பெஞ்சமின். ஆனால் நதியில் தினமும் நீந்திச் செல்வது ஆபத்தானது. நதியின் போக்கு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
தண்ணீர் மட்டம் உயரும், குறையும் என்று பெஞ்சமின் குறித்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் முனிச் நகருக்கு 30 ஆயிரம் மக்கள் புதிதாக வந்து சேரும்போது மாற்றுப் போக்குவரத்தை யோசிக்க வேண்டியது அவசியம் என்கிறார் பெஞ்சமின்.