2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருவதுடன், அப்படத்தை தனது பள்ளி பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரித்தும் வருகிறார்.
இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 20 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற பின் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இயக்குனர் வசந்தபாலன், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன். நட்பின் கரங்கள் எனை அன்பின் சிப்பியில் அடைகாத்து அருளியதால் சுகமாய் இல்லம் திரும்பியிருக்கிறேன்.
நன்றியை விட உயர்ந்த வார்த்தை உண்டெனில், உணர்ச்சிக்கரமான வார்த்தை உண்டெனில், கண்ணீர் கசியும் வார்த்தை உண்டெனில், அதை என் நட்பின் திசையெங்கும் படைக்கிறேன். ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு மெல்ல பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.