தமிழ் திரையுலகினர் பங்கேற்ற பிரமாண்ட நட்சத்திர விழா மலேசியாவில் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.தென்னிந்திய நடிகர் சங்கம், சன் டிவி, தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் இணைந்து வழங்கிய நட்சத்திர விழா மலேசியாவின் கோலாலம்பூரில் சனிக்கிழமை பகல் துவங்கி நள்ளிரவு வரை பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், டெக்னீஷியன்கள் உள்பட பலர் திரளாக பங்கேற்றனர்.
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் விளையாட்டு அரங்கில் நடந்த பிரமாண்டவிழாவி்ல் 6 அணிகள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஹைலைட்டாக அமைந்தது. இதில் கார்த்தி தலைமையில் கோவை கிங்ஸ், ஜீவா தலைமையில் சேலம் சீட்டா, விஜய் சேதுபதி தலைமையில் ராம்நாடு ரனோஸ், விஷால் தலைமையில் மதுரை காளைஸ், சிவகார்த்திகேயன் தலைமையில் திருச்சி டைகர், அருண் விஜய் தலைமையில் சென்னை சிங்கம்ஸ் ஆகிய 6 அணிகள் மோதின. ஒவ்வொரு அணியும் ஒரு அணியுடன் ஆட்டம் என 3 ஆட்டம் நடந்தது.
இதில் ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடம் பிடித்த சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் டாஸ் ஜெயித்த திருச்சி டைகர் அணி கேப்டன் சிவகார்த்திகேயன், எதிர் அணியை ஆட அழைத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் சென்னை சிங்கம்ஸ் அணி 89 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் வீரர் சிவா சிறப்பாக ஆடி ரன் குவித்தார். பின்னர் ஆடிய திருச்சி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கேப்டன் சிவகார்த்திகேயன் அதிரடியாக ஆடியும் அணியால் வெற்றி ஈட்ட முடியவில்லை. கோப்பையை சென்னை சிங்கம்ஸ் வென்றது.இதேபோல் விழாவில் கால்பந்து போட்டியில் ஆர்யா தலைமையில் ஒரு அணியும் அதர்வா தலைமையில் மற்றொரு அணியும் மோதின.
சுவாரஸ்யமான இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்யா அணி வெற்றி பெற்றது.
இந்த இரண்டு கோல்களையும் போட்டு ஆர்யா அசத்தினார். விழாவில் நடிகைகளின் டான்ஸ் நிகழ்ச்சிகள் சிறப்பு ஹைலட்டாக அமைந்தது.
காமெடி நாடகங்கள், மிமிக்ரி ஷோ, டிரெய்லர் மற்றும் பாடல் வௌியீட்டு நிகழ்ச்சிகள் உள்பட திரையுலக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதம்பமாக இந்த விழா அமைந்தது.
அரங்கம் முழுவதும் தமிழ் ரசிகர்களால் நிரம்பியது. பகல் முதல் நள்ளிரவு வரையும் பலத்த கரவொலி கோஷம் எழுப்பி கலைஞர்களை அவர்கள் ஊக்குவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், பாக்யராஜ், சூர்யா, சத்யராஜ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, சித்தார்த், விஷ்ணுவிஷால், விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், சூரி, சதீஷ், வைபவ், சிவா, அருண் விஜய், ஷாம், அதர்வா, பசுபதி, சாந்தனு, பரத், ரமணா, நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், அஞ்சலி, நிக்கி கல்ராணி, வரலட்சுமி, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாயிஷா, ஆண்ட்ரியா, கேத்ரின் தெரசா, ஸ்ரிதிவ்யா, ராய் லட்சுமி, இனியா, பூர்ணா, ஜனனி, சஞ்சனா சிங் மற்றும் மலேசிய விளையாட்டு துறை அமைச்சர் சரவணன், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சன் நெட்வொர்க் ரூ.9 கோடி நிதி: சன் நெட்வொர்க் சார்பில் நடிகர் சங்கம், சங்க அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் மற்றும் ரூ.7 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டது. இதை சன் டிவி நிர்வாக இயக்குனர் விஜயகுமார், ரஜினி-கமலிடம் வழங்கினார்.