தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை நடைமுறைப்படுத்துவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவித்த பின்னர் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி வரி செயல்படுத்தப்படாவிட்டால், மக்கள் இன்னும் கடுமையான வரியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 வரவுசெலவுத் திட்டம்
அத்துடன், அரசாங்க வருவாயை அதிகரிக்க பொதுமக்களுக்கு மேலும் சுமை இல்லாமல் வரையறுக்கப்பட்ட வரி முறையை செயல்படுத்த வேண்டும் என்றும், இந்த விடயத்தில் நிதி அமைச்சகத்தால் ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்று தாங்கள் ஆராய்வதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்டம், இலங்கையில் உள்ள வெளி தரப்பினருக்கு சேவைகளை வழங்கி அந்நியச் செலாவணியைமீண்டும் கொண்டு வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 15 சதவீத சேவைகள் ஏற்றுமதி வரியை 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.