தேசிய விருது பெற்ற படைப்புகளில் கதையின் நாயகியாக நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ என பெயர் சூட்டப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் பாக்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’. இதில் கதையின் நாயகியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார்.
இவருடன் குணச்சித்திர நடிகை லிசி ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அஜித் ஆச்சார்யா ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜா பவதாரணி இசையமைத்திருக்கிறார்.
வளரிளம் பருவ பிள்ளைகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூபி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹாசீர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் மலையும், மலை சார்ந்த பிரதேசம் ஒன்றின் பின்னணியில் கதையின் நாயகியான ஷீலாவும், குழந்தை நட்சத்திரங்களும் உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையினதான புகைப்படமும், அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஜோக்கர் வேடமிட்ட பெண்ணொருத்தியின் தோற்றமும் இடம் பிடித்திருப்பது, ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
‘கன்னி மாடம்’, ‘மங்கி டாங்கி’, ‘வண்டி’ என வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வழங்கிய ரூபி பிலிம்ஸ் நிறுவனம் ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ என வித்தியாசமான தலைப்பில் படத்தைத் தயாரித்திருப்பதால், திரையுலக வணிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.