உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை எஸ்தர் அனில் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மின்மினி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘பூவரசம் பீப்பி’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மின்மினி’.
இதில் எஸ்தர் அனில், ஹரி கிருஷ்ணன், பிரவீன் கிஷோர், கௌரவ் காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹம்ஸா மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் வாரிசான கதீஜா ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இவர் இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பதின்ம வயது காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டேஜ் அன்ரியல் பிரைவேட் லிமிடெட் ,பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆங்கர் பே ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் பரஹாம்சா மற்றும் ஆர். முரளி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹலீதா ஷமீமின் பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் தோன்றுவதைக் காட்டிலும் அதன் பின்னணி காட்சிகள் கவனம் ஈர்க்கிறது.
இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் ஹலீதா ஷமீம் கதாபாத்திரத்தின் நிஜமான இயல்பான வளரிளம் பருவ தோற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் காத்திருந்து அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தி, படைப்பை வழங்கவிருக்கிறார். அதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.