ஆஸ்கர் விருதை திருடிவிட்டு, அதுகுறித்து முகநூல் வீடியோவில் பெருமையாக பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை திரீ பில்போர்ட்ஸ் படத்தில் நடித்த பிரான்சிஸ் மெக்டோர்மண்டுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது அன்று மாலையே திருடுபோனதாக மெக்டோர்மண்ட் அங்கிருந்தவர்களிடம் புகார் அளித்துள்ளார். நேற்று இரவு டெர்ரி பிரையண்ட் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், இசை மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனது குழுவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு, ஆஸ்கர் விருதுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அது திருடப்பட்ட விருது என்பது தெரியாத பலரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர்.இதனைக் கவனித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் உதவியுடன் காவல்துறையினர் பிரையண்டைப் பிடித்துள்ளனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு முறை கூட பிரையண்ட் மேடை ஏறாததால் அவர்மீது சந்தேகம் எழுந்ததாகவும் அதனால், அவரைப் பின்தொடர்ந்ததாகவும் அந்த புகைப்படக் கலைஞர் தெரிவித்திருக்கிறார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரையண்ட் 20ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தியதால் பிணையில் விடுவிக்கப்பட்டார். திருடப்பட்ட ஆஸ்கர் விருதை போலீசார் மெக்டோர்மண்டிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.