தென்னிந்திய பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டுள்ளன.
டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். சிரியலில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
குறிப்பாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பை இன்றளவும் பலரும் புகழ்ந்து பேசுவார்கள். இது தவிரப் பைரவா, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கே வைத்தியர்கள் அவரது உயிரைக் காப்பாற்றத் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 48 ஆகும். டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்தார். வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற வைத்தியர்கள் கண்களை தானம் பெற்றுள்ளனர். சினிமாவில் என்ன தான் வில்லன் நடிகராக இருந்தாலும் உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
இன்று சனிக்கிழமை மாலை அவரது உடல் ஓட்டேரியில் அமைந்துள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.