‘நான் அவனில்லை’, ‘திருட்டுப் பயலே’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஜீவன், சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ‘பாம்பாட்டம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை நடிகர் ஆர்யா தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் வி. சி. வடிவுடையான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பாம்பாட்டம்’. இதில் நடிகர் ஜீவன் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் பொலிவுட் நடிகை மல்லிகா செராவத், நடிகை ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், துடுப்பாட்ட வீரர் சலீல் அங்கோலா, ‘பருத்திவீரன்’ சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்திருக்கிறார். பாம்பை மையமாக வைத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைத்தியநாதன் பிலிம் கார்டன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. பழனிவேல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் 120 அடி நீளமுடைய ராட்சத பாம்பு தோன்றி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த முன்னோட்டத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
” கிபி 1000, 1500, 1980 என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் திரைக்கதை பயணிக்கிறது. இதற்காக பிரத்யேகமான அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்றது.
படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் பரமபத விளையாட்டை முன்னிறுத்தியும், ராஜதந்திர ரீதியாக செயல்படும் சில கதாபாத்திரங்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள்… ஆகியவை இப்படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.
இந்தப் படத்தில் 120 அடி நீளமுடைய ராட்சத பாம்பு ஒன்றும் நடித்திருக்கிறது. இதுவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.