‘செல்ஃபி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் குணா நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அலங்கு’ திரைப்படம் , ‘மருத்துவக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் எச்சங்களை நிலப்பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்பினை இந்த படைப்பு விவரிக்கிறது’ என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அலங்கு’ எனும் திரைப்படத்தில் குணா நிதி, செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, ரெஜின் ரோஸ் , கொற்றவை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் செல்லப் பிராணியான நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீஷ் இசையமைத்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி எக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி ஜி ஃபிலிம் கம்பனி மற்றும் மேக்னாஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் டி. சபரீஷ் மற்றும் எஸ். ஏ .சங்கமித்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழக, கேரள எல்லை பகுதியில் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் எச்சங்கள் மற்றும் கழிவுகள் ஆகியவை நாளாந்தம் உரிய அனுமதியில்லாமல் கொட்டப்படுகிறது.
இந்த கழிவுகளால் எம்மாதிரியான ஆபத்து ஏற்படுகிறது என்பதை உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் வாழ்வாதாரம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வியலும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த வனப்பகுதிகளில் நடத்தி இருக்கிறோம். இது பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்” என்றார்.