தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான ஆதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சப்தம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரபல இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சப்தம்’ எனும் திரைப்படத்தில் ஆதி, லக்ஷ்மி மேனன், லைலா, சிம்ரன், எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ஒலியின் பின்னணியில் ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் 7 ஜி சிவா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி இயக்குநர் அறிவழகன் பேசுகையில், ” ஈரம் திரைப்படத்தில் தண்ணீரை பேயாக காட்டி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தேன். இந்தத் திரைப்படத்தில் கண்களுக்கு புலப்படாத பிரத்யேக ஒலி குறிப்பை பேயாக காட்சிப்படுத்தி இருக்கிறேன். சவால் மிக்க இந்தப் பணியில் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு முழுமையாகவும், அர்ப்பணிப்புடன் கூடியதாகவும் இருந்தது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும். நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பானதாக இருந்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு பட மாளிகை அனுபவத்தை வித்தியாசமாக வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
