சமீப காலங்களாக மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தனக்கு அரசியலில் சேர விருப்பமில்லை என்றும் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “திரைப்பட நடிகர்கள் தலைவர்களாவது என் நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“நடிகர்கள் அரசியலில் சேர்வது எனக்குப் பிடிக்காது, காரணம் என்னவெனில் அவர்கள் நடிகர்கள் அவர்களுக்கென்று ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் மீதான தங்களது பொறுப்புணர்வை நடிகர்கள் அறிந்திருப்பது அவசியம்” என்றார்.
அதே போல் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது பற்றி பிரகாஷ்ராஜ் கூறும்போது, “சினிமா ஹால்களில் எழுந்து நின்றுதான் ஒருவர் தனது தேசப்பற்றைக் காண்பிக்க வேண்டும் என்று நான் கருதவில்லை” என்றார்.
சமீபத்தில், பிரதமர் மோடியையும், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மீது விமர்சனம் வைத்த பிரகாஷ் ராஜ். தன்னை விட இவர்கள் இருவரும் சிறந்த நடிகர்கள் என்றும் 5 தேசிய விருதுகளுக்குத் தகுதியானவர்கள் என்று விமர்சித்ததையடுத்து லக்னோ நீதிமன்றத்தில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.