18 நாட்களில நடைபெற்று முடிந்த 23 போட்டி முடிவுகளின் அடிப்படையில் 2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளடியேட்டர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பானுக ராஜபக்ஷவின் காலி கிளாடியேட்டர்ஸ் அணியும், திசர பெரேராவின் ஜப்னா கிங்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் தொடர்ச்சியாக சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது லங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் ஜப்னா அணி காலியை 53 ஓட்டங்களினால் வீழ்த்தி சம்பியன் ஆனது.
இந் நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அதற்கு பழி தீர்க்கும் நோக்கில் எதிரணியை எதிர்கொள்ளும் காலி.
இறுதிப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகும்.
இறுதிப் போட்டிக்கு செல்லும் முன் நடப்பு தொடரில் இரு அணிகளும் மூன்று தடவைகள் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அந்த மூன்று போட்டிகளிலும் காலி அணி ஜப்னா கிங்ஸை துவம்சம் செய்துள்ளனர்.
இதன் சிறப்பு என்னவெனில், ஆரம்ப சுற்றுகளில் ஜப்னா கிங்ஸை வீழ்த்திய ஒரே அணி காலி கிளாடியேட்டர்ஸ் தான்.
கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்யத் தவறியுள்ள ஜப்னா கிங்ஸ், அவர்களுடனான தமது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, சம்பியன்ஸ் கிண்ணத்தை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக கைப்பற்றும் நோக்கில் இன்று களமிறங்குகிறது.
மறுபுறம் ஜப்னா கிங்ஸுக்கு எதிரான தோல்வி அடையாத வெற்றிக் கணக்கினை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள நோக்குடன் காலி கிளடியேட்டர்ஸ் உள்ளது.
முதல் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், அடுத்த 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று போனஸ் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகித்து தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான கிங்ஸ்.
அதேநேரம் காலி கிளாடியேட்டர்ஸ் எட்டு ஆரம்ப சுற்று ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று போனஸ் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
கிளாடியேட்டர் அணியின் சம்மிட் பட்டேல் மற்றும் ஜப்னா அணியின் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 15 விக்கெட்டுகளுடன் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களாக உள்ளனர்.
உலகின் சிறந்த டி-20 பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க ஜப்னா அணியில் உள்ள போதிலும் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் 13 ஆவது இடத்தில் உள்ளார்.
அதேநேரம் மகேஷ் தீக்ஷனா விட ஒரு விக்கெட் பின்தங்கியிருக்கும் ஜேடன் சீல்ஸும் ஜப்னாவுக்கு பெரும் நம்பிக்கையாக உள்ளார்.
காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றில் விளையாடாத அவர், இரண்டாவது தகுதிச் சுற்றில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேநேரம் லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணியில் அசத்தும் நுவான் துஷாரவின் பங்களிப்பும் காலி அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவருமே தமது அணிகளுக்கு பக்க பலமாக உள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் குசல் மெண்டீஸ் 9 ஆட்டங்களில் 288 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், அவிஷ்க 9 போட்டிகளில் 249 ஓட்டங்களுடனும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முதல் சில போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க தவறிய காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க இறுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளார்.
தொடக்கப் போட்டிகளில் ஜப்னா அணித்தலைவர் திசர பெரேரா துடுப்பாட்டத்தில் முன்னிலை வகித்தமை அணியின் வெற்றிகளை எளிதாக்கியது. இருந்த போதிலும் இறுதிப் போட்டிகளில் சில பின்னடைவுகளைச் சந்தித்தார் திசர.
இப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்னா கிங்ஸ் அணித் தலைவர் திசர பெரேரா,
கிளாடியேட்டர்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் செய்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொண்டு நாளைய (இன்றைய) போட்டியில் களமிறங்குவோம்.
இறுதியாக நடந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதால் அணியின் வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் உள்ளனர். நாங்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாக மாட்டோம். நாளைய (இன்றைய ) போட்டியில் நம் எமது பங்களிப்பினை சிறப்பாக செய்தால் வெற்றி பெறலாம் என்றார்.
பானுக ராஜபக்ஷ
இந்தப் போட்டி உண்மையில் ஒரு தேசிய அணிக்கு எதிரான போட்டி போன்றது. நாங்கள் ஜப்னாக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த வெற்றியின் மூலம் நமது வீரர்களின் மனநிலை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
நாங்கள் அவர்களை மூன்று முறை தோற்கடித்தோம் ஆனால் நாளை எதிரணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் அவர்கள் எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்த போட்டிக்கான எங்கள் ஆயத்தங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறினார்.