அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் (36ஆவது லீக்) போட்டியில் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.
இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தை உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றிய அவுஸ்திரேலியா, அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.
உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துக்கு, பாகிஸ்தானில் 2025இல் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் பறிபோயுள்ளது.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் வெற்றி இலகுவாக வந்துவிடவில்லை.
மத்திய வரிசையில் கிறிஸ் வோக்ஸும் பின்வரிசையில் டேவிட் வில்லி, ஆதில் ரஷித் ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
எனினும் கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாயிற்று.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா, மத்திய வரிசை வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர்களான ட்ரவிஸ் ஹெட் (11), டேவிட் வோர்னர் (15) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது. (38 – 2 விக்.)
ஆனால், ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மானுஸ் லபுஷேன் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (178 – 5 விக்.)
இந் நிலையில் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படலாம் என கருதப்பட்டது.
ஆனால், மத்திய வரிசை வீரர்கள் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினர்.
கெமரன் க்றீன் (47), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (35), அடம் ஸம்பா (29) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீ;ச்சில் கிறிஸி; வோக்ஸ் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்தின் ஆரம்பம் மிக மோசமாக அமைந்தது. ஜொனி பெயாஸ்டோவ் முதல் பந்திலும், ஜோ ரூட் (13) 5ஆவது ஓவரிலும் ஆட்டம் இழந்தனர். (19 – 2 விக்.)
அதனைத் தொடர்ந்து டாவிட் மலான் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
3ஆவது விக்கெட்டில் அவர்கள் இருவரும் 84 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டாவிட் மலான் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஒரு ஓட்டத்துடன் களம் விட்டகன்றார். (106 – 4 விக்.)
எனினும் பென் ஸ்டோக்ஸும் மொயீன் அலியும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
பென் ஸ்டோக்ஸ் 64 ஓட்டங்களுடனும் மொயீன் அலி 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
மத்திய வரிசையில் கிறிஸ் வோக்ஸ் (32), டேவிட் வில்லி (10), ஆதில் ரஷித் (29) ஆகியோர் இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்ய எடுத்த முயற்சி கைகூடாமல் போனது.
பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அடம் ஸம்ப்பா
அரை இறுதிக்கான வாய்ப்புகள்
நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இன்னும் 9 லீக் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் இதுவரை இந்தியா (14 புள்ளிகள்), தென் ஆபிரிக்கா (12 புள்ளிகள்) ஆகிய இரண்டு அணிகள் மாத்திரமே அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.
10 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலிருக்கும் அவுஸ்திரேலியா மீதம் உள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுவிடும்.
தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 ஆணிகளில் ஒன்று 4ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேற முயற்சிக்கவுள்ளன. இந்த 3 அணிகளில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. மற்றைய இரண்டு அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது.
அணிகள் நிலை (04-11-2023 வரை)