கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும்.
கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள்.
அதில் இருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.
கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.
நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.
டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.
‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நக பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.