வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக முன்னணியின் தவிசாளர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக சார்பாக அதன் தவிசாளார் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.முஜிபுர் ரஹ்மான், சட்டத்தரணி எம்.இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மீள்குடியேறும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுவரும் எதிர்ப்புக்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விசேடமாக கவனம் சொலுத்தப்பட்டது.
வடக்கில் நடைபெற உள்ள தேசிய மீலாத் தின நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட உள்ள நிலையில், இந்த காணி பகிர்வினை தாமதிக்காமல் மேற்கொள்வது அவசியமாகும்.
இந்த நிலைமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவம் நேரடியாக தலையீடு செய்து நீதியான முறையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தீர்க்கப்படுவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் முன்வைத்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி சுமூகமான தீர்வு ஒன்றினை விரைவாக எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.