விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.
திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்ரா பௌர்ணமி, வைகாசி வசந்தோத்சவம், ஆனி பிரமோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உத்சவம் ஆகிய விழாக்கள் இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு…
இந்த கோவிலில் மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோவிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.
திருத்தங்கல்லில் உள்ள ‘தங்காலமலை’ என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.
இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோவிலில் முதல் நிலை கோவிலில் மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2ம் நிலை கோவிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.