பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தாக்குதல்களின் காரணமாக, தொண்டை வலி, கரகரப்பு, தொண்டைப்புண் மற்றும் டான்சிலைட்டீஸ் (Tonsillitis) போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இது போன்ற தொண்டை தொந்தரவுகளை இயற்கை மருத்துவத்தின் மூலம் குணமாக்க, அற்புதமான வழிகள் இதோ.
தொண்டை தொந்தரவுகளை குணமாக்கும் தீர்வுகள்
1/4 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் தேன், ஆகியவற்றை ஒரு டம்ளர் மிதமான நீரில் கலந்து, அதை உணவு சாப்பிடுவதற்கும் 1 மணி நேரத்திற்கு முன் மூன்று வேளைகளும் தவறாமல் குடித்து வர வேண்டும்.
தொண்டை வீக்கம் ஏற்படாமல் தடுக்க, உணவு சாப்பிட்டவுடன் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களின் மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்பு வகைகள் ஆகிய அனைத்தையும் சாப்பிடக் கூடாது.
உணவு சாப்பிட்ட பின் வெற்றிலை மற்றும் பாக்கு போட்டுக் கொள்வது நல்லது.
கடுக்காய் கஷாயத்தை வாயில் வைத்து கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், டான்சில், தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப் புண்கள் குணமாகுவதோடு, சளி முற்றிலும் வெளியேறிவிடும்.
1/2 டீஸ்பூன் மாசிக்காய் தூள், 2 டீஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் குழைத்து, இரவு உறங்கும் முன் சாப்பிட்டு வந்தால், தொண்டையில் சதை வளர்ச்சி அடையாமல், கட்டுப்படுத்தப்படும்.
உணவில் சாப்பிடும் போது இனிப்பு, புளிப்பு, உப்பு அகிய மூன்று சுவைகளையும் குறைத்து, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை அளவோடு சாப்பிட வேண்டும்.
இரவில் திரிபலா பொடியை சூடான நீரில் கலந்து, அதை 1/2 டம்ளர் அளவு குடித்து வர வேண்டும். புளித்த மோர், தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் நீரில் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் உப்பு ஆகிய அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும்.