நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்து காலநிலை இயல்பிற்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் தற்பொழுதும் இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
தொடர் மழைவீழ்ச்சி காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் குறித்த கங்கைகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடலிலும் காற்றின் வீசும் வேகம் அதிகரித்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே, மக்களை மழை நேரங்களின் போதான இடி மற்றும் மின்னல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும், கடலுக்கு செல்லும் மீனவர்களையும் பாதுகாப்பாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓக்கி சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதாகவும், நாட்டிற்கு எதிர்த் திசையில் நகர்ந்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.