இலங்கையில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் முதல் மழையுடனான வானிலை தீவிரவமடையக்கூடும் என்ற வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை மேலும் தீவிரமடைந்து, திருகோணமலையில் இருந்து 950 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை காரணமாக, காலி, குருநாகலை, புத்தளம், மட்டக்களப்பு, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, ரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று வரையில் அசாதாரண காலநிலையால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் 48 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மன்னார் முதல் புத்தளம், கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசம் கடும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும், எனவே அங்கு மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், களு கங்கை, மில்லகந்தையில் பெருக்கெடுத்திருப்பதால், சிறிய அளவான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ராஜாங்கனை, தெதுருஓய, லக்ஸபான மற்றும் பொல்கொல்ல ஆகிய நீர்நிலைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை, பதுளை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.