இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் இ.ஓ.எஸ் – 03 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய முடக்கல்கள் காரணமாக இழந்த வேகத்தையும் நேரத்தையும் திரும்பப் பெற விரும்பும் விண்வெளி நிறுவனத்திற்கு தோல்வி ஒரு பெரிய பின்னடைவாகும்.
புவி கண்காணிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தும் விதமாக இ.ஓ.எஸ் – 03 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவுசெய்து செயற்கைக்கோளை உருவாக்கியிருந்தது.
இதை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் தயாரானது.
திட்டமிட்டபடி இன்று (12.08.2021) அதிகாலை சரியாக 5:43 நிமிடங்களுக்கு ஜிஎஸ்எல்வி எஃப்-10 ரொக்கெட் செயற்கைக்கோளை எடுத்துக்கொண்டு விண்ணில் பாய்ந்தது.
ஆனால் சில நிமிடங்களில் விஞ்ஞானிகள் கணித்த பாதையிலிருந்து ராக்கெட் விலகியது. இதனால் சுற்றுவட்டப் பாதையில் ராக்கெட்டை நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரொக்கெட்டை நிலைநிறுத்த முடியவில்லை. இதனால் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 14 ஜி.எஸ்.எல்.வி ரொக்கெட்டுகளை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. அவற்றில் 2006 ஆம் ஆண்டு ஒருமுறையும், 2010 ஆம் ஆண்டில் இருமுறையும் தோல்வி அடைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news