இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo’ டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது.
இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் மற்ற கோணங்களையும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? வீரர்களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படுகின்றன? ஒரு பயோ – ஸ்போர்ட் ஸ்டோரி…
வெறுமனே ரன் எடுப்பவர்களையும், விக்கெட் வீழ்த்துபவர்களையும் மட்டுமே கேப்டன் விராட் கோலி விரும்புவதில்லை. அவருக்கு மிகச்சிறந்த அத்லெட்ஸ் வேண்டும். வேகமான அவுட்ஃபீல்டிலும் வெறித்தனமாக ஓடி பௌண்டரியைத் தடுக்கும் ஃபீல்டர் வேண்டும். ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்த இடத்தில், இரண்டு ரன்கள் ஓடக்கூடியவராக இருக்க வேண்டும். டெஸ்ட், ஒருநாள், டி-20 என எல்லா ஃபார்மட்டிலும் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருந்தாலும் ஃபிட்டாக இருக்க வேண்டும். இனி, பெர்ஃபாமன்ஸைவிட ஃபிட்னெஸ்தான் முக்கியம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டது பி.சி.சி.ஐ. யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா அணியில் தேர்வாகாததற்கு இதுவும் ஒரு காரணம்.
ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்தும் நம்மவர்கள், வெறும் உடற்பயிற்சியில் மட்டும் அக்கறை செலுத்தாமல், உணவு முறையிலும் இப்போது அதிக அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதற்குதான் இப்போது எடுக்கப்பட்டுள்ள உடற்கூறு (DNA) சோதனை. DNA-க்கள், நம் குணங்களை முடிவுசெய்பவை. நம் செயல்பாடுகள் அனைத்தும் அதைப் பொறுத்தே அமையும். நம் உணர்வுகளிலிருந்து உணவு வரை நம் வெளிப்பாடுகளை DNA பாதிக்கும். அதனால், அவற்றைப் பரிசோதித்து வீரர்கள் எந்த மாதிரியான உணவுமுறை, பயிற்சிமுறையைப் பின்பற்றவேண்டும் எனத் தீர்மானிக்க உள்ளனர்.
குழப்புகிறதா? சிறிய உதாரணம். FTO என்பது, நமக்குள் இருக்கும் ஒரு ஜீன். Fat mass and obesity-associated protein என்பதன் சுருக்கம்தான் FTO. நம் உடல், கொழுப்புச்சத்துக்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்கிறது என்பது இந்த ஜீனைப் பொறுத்துத்தான் அமையும். FTO மரபணு AA, AT, TT என மூன்று வகையிலானது. ஒவ்வொருவருக்கும் அது வேறுபடும். AA வகை FTO மரபணு உள்ளவர்களின் உடல் கொழுப்புச்சத்துக்கு அதிகமாக ரியாக்ட் செய்யும். அதனால் அவை உடலில் தங்கிவிடும். இதுவே TT வகை மரபணு அதற்கு நேர் எதிர். சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். AT வகை மரபணு இவை இரண்டுக்கும் இடைப்பட்டது. இதுபோன்று கார்போஹைட்ரேட்ஸ், லேக்டோஸ் உள்ளிட்டவற்றை நம் உடல் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது இந்தப் பரிசோதனையின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
வீரர்களின் 40 – 45 DNA-க்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றின் தன்மைக்கு ஏற்ப வீரர்களின் டயட், பயிற்சி முறை ஆகியவை முடிவுசெய்யப்படும். பயிற்சி முறை? ஆம், நம் உடல் விளையாட்டின் அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது, தொடர் பயிற்சிகளுக்கு எப்படி ரியாக்ட் செய்கிறது, பயிற்சிகளுக்குப் பிறகு உடலுக்கு எந்த அளவு ஓய்வு தேவை என்பது போன்ற விஷயங்களையும் நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம். சில சமயங்களில் ஓவர் வொர்க்அவுட்டால் அதிக பிரஷருக்கு ஆளாக நேரிடும்; மனச்சோர்வு ஏற்பட்டுவிடும். இதுபோன்றவற்றை இந்தப் பரிசோதனையின் மூலம் நம்மால் தவிர்க்க முடியும். இந்திய அணி வீரர்களுக்கு விதித்திருக்கும் கொழுப்பு விகிதத்தின் அளவு 23 சதவிகிதம். அதற்குமேலே இருந்தால் குட்பைதான்!
ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்ல வேண்டுமெனில், கோலியின் DNA-வை சோதனை செய்து, அவரது உடம்பு எந்த அளவு கொழுப்பைக் கரைக்கும், கொழுப்பு அதிகமா இருக்கும் உணவை அவர் சாப்பிடலாமா, எந்த மாதிரியான டயட் முறையைப் பின்பற்றினால் சரியான ஊட்டச்சத்து கிடைக்கும், அவர் எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்தால் உடல் ஃபிட்டாக இருக்கும், பயிற்சிக்குப் பிறகு உடல் உறுப்புகள் ரிலாக்ஸ் ஆக எவ்ளோ நேரம் ஓய்வெடுக்க வேண்டும்… போன்ற அனைத்து தகவல்களும் நமக்குக் கிடைக்கும். அதை வைத்து நன்றாகத் திட்டமிட்டு, அவரை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும். அவ்ளோதான் பாஸ்!
அதிகமான பயிற்சிக்குப் பிறகும், ஆட்டத்தின் தேவைக்கேற்ப தங்கள் உடல் ஒத்துழைக்காததை இப்போதுதான் பலரும் உணர்ந்துள்ளனர். இதுபோல், தங்களின் உடல்குறித்த முழு டேட்டாவும் வீரர்களின் கையில் இருப்பதால், தனிப்பட்ட முறையில் அவர்களின் முன்னேற்றத்துக்கும் இது உதவும். ப்ரீமியர் லீக், NBA போன்ற தொடர்களில் இந்தப் பரிசோதனை நடைமுறையில் இருக்கிறது. இந்திய வீரர்களுக்கும் இந்தச் சோதனை தேவை எனக் கேட்டு வாங்கியவர், அணியின் ஃபிட்னெஸ் ட்ரெய்னர் ஷங்கர் பாசு. இந்தப் பரிசோதனையைச் செய்ய, தலைக்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவு செய்கிறது பி.சி.சி.ஐ.
YOYO டெஸ்ட்னா என்ன?
வீரர்களின் ஸ்டாமினா எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவது இந்தப் பரிசோதனைதான். யுவி, ரெய்னாவை வீட்டில் உட்காரவைத்ததும் இதேதான். அப்படி என்ன டெஸ்ட் இது? சிறுவயதில் நாம் விளையாடிய விளையாட்டின் சைன்டிஃபிக் வெர்ஷன்தான் இந்த `YOYO’ டெஸ்ட். 20 அடிக்கு இரண்டு கோடுகள். இந்தக் கோட்டிலிருந்து அந்தக் கோட்டைத் தொட்டுவிட்டுத் திரும்ப வேண்டும். அதைத் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும். ஒருமுறை தொட்டு வருவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கும். அது முடிந்தவுடன் அடுத்த ஸ்டேஜ் தொடங்கிவிடும். அப்போது கால அவகாசம் கொஞ்சம் குறைக்கப்படும். இரண்டு ஸ்டேஜ்களுக்கு நடுவில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கொள்ள ஐந்து நொடி வரை கேப் கிடைக்கும்.
இப்படித் தொடர்ந்துகொண்டே போகும் இந்த டெஸ்ட், அடுத்தடுத்த கட்டத்தை எட்டும்போது, ஒரே ஸ்டேஜுக்கு பல சப் ஸ்டேஜ்கள் இருக்கும். அதாவது, அதேகால அவகாசத்தில் பலமுறை ஓடவேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எல்லையை அடையாவிடில், எச்சரிக்கை தரப்படும். இரண்டுமுறை ஒருவர் எச்சரிக்கை பெற்றுவிட்டால், அவரது தேர்வு அங்கேயே முடிந்துவிடும். அதுவரை அவர் எத்தனை ஸ்டேஜ்கள், சப்-ஸ்டேஜ்கள் கடந்திருந்தாரோ, அதுவே இந்த `YOYO’ டெஸ்டில் அவர் பெறும் புள்ளிகள். உதாரணமாக, ஒருவர் 16-வது ஸ்டேஜின், 4-வது சப்-ஸ்டேஜோடு வெளியேறுகிறார் எனில், அவர் பெறும் புள்ளிகள் 16.3.
இந்திய அணி நிர்வாகம், நம் வீரர்கள் இந்த டெஸ்ட்டில் பாஸாக வைத்திருந்த பாயின்ட்ஸ் 19.5. இந்த டெஸ்ட் நடந்தபோது எந்த வீரரும் அதைத் தாண்டவில்லை. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே, விராட் கோலி ஆகியோர் முறையே 19.2, 19 புள்ளிகள் பெற்றிருந்தனர். யுவராஜ் சிங் 16 புள்ளிகள் மட்டுமே பெற, அவரைப் புறக்கணித்துவிட்டனர். இந்திய அணி இளம் அணியாக இருப்பதால், இப்போதிருந்தே சரியான திட்டமிடலோடு, உலகத்தரம் வாய்ந்த அணியாக உருவாக்க நினைக்கிறது பி.சி.சி.ஐ. அதற்கு, அனைத்து வீரர்களும் கன்சிஸ்டென்ட்டாக விளையாட வேண்டும். அதற்கு, அவர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும். ஸோ, இந்த டெஸ்ட் ரொம்ப முக்கியம்!
இதுபோல் பல பயோலஜிக்கல் பரிசோதனைகள் முன்பு நடந்துள்ளது. வீரர்களின் கொழுப்பு அளவைக் கணக்கிட `Skinfold’ என்ற முறையை முதலில் பயன்படுத்தினர். பிறகு, DEXA எனப்படும் Dual-energy X-ray absorptiometry ஸ்கேன் முறையும் நடைமுறையில் இருந்தது. இதுவும் வீரர்களின் ஃபிட்னெஸைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட முறைதான். இவையெல்லாம் பெரிய அளவில் பேசப்பட்டதில்லை. ஆனால், DNA டெஸ்ட் என்று குற்றவியல் ரேஞ்சுக்குப் போய்விட்டதால், இந்தப் பரிசோதனை லைம்லைட்டுக்கு வந்துள்ளது. இது சரியான முடிவுகளைத் தராது என்றும் சில மருத்துவர்கள் குறை சொல்கின்றனர்.
விளையாட்டு… ஆடுகளத்தோடு முடிந்துவிடும் சாதாரண விஷயம் அல்ல. ஒரு வெற்றிக்குப் பின் எத்தனையோ முயற்சி, உழைப்பு உள்ளன. நம்மைப்போல் அவர்களால் நினைத்த நேரத்தில் ஐஸ்க்ரீம், பிரியாணி சாப்பிட முடியாது. தண்ணீரிலிருந்து ஜூஸ் வரை அளந்துதான் குடிக்க வேண்டும். இல்லையேல், அவர்கள் இடம் ஓகயாதான். கிரிக்கெட்டுக்குப் பின்னால் அரசியல் மட்டுமல்ல, அறிவியலும் இருக்கிறது.
ஃபிட்னெஸ் முக்கியம் அமைச்சரே!