வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடவுள்ளது.
அதன் செயலாளரும், நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 6 அரசியல் கட்சிகள் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் தமது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் முன்வைத்தன.
தேர்தல்களின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விசேட குழுவில் தெரிவித்தார்.
விருப்பு வாக்குமுறையுடன் பெண்கள் போட்டியிடுவது சிரமமானது என்றும், குடும்பப் பின்னணியின் ஊடாகவே பெண்கள் பெரும்பாலும் அரசியலுக்குள் நுழைகின்றார்கள் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்துக்குள் நுழைவது சிரமமானது என்றும் அவர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
முழுமையான தொகுதிவாரி முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு எழுகிறது என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குழுவில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை ஒரே நாளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இங்கு தெரிவித்தார்.
அதேநேரம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 06 அரசியல் கட்சிகள் தேர்தல் சட்ட மறுசீரமைப்புத் தொடர்பான குழு முன்னிலையில் நேற்று முன்தினம் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தன.
இங்கு தமது நிலைப்பாட்டை முன்வைத்த இலங்கை லிபரல் கட்சியின் செயலாளர் கமல் நிசங்க குறிப்பிடுகையில், நியூசிலாந்தில் காணப்படும் தேர்தல் முறையைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்றும் கூறினார்.
தமது கட்சி மாவட்ட விகிதாசார முறைக்கு எதிர்ப்பு என்றும், இருந்தபோதும் தேசியப்பட்டியல் முறையை அவ்வாறே பேணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்போது 160 பேரை தேர்தலின் மூலமும், 65 பேர் தேசிய பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் கே. விக்னேஸ்வரன் இக்குழு முன்னிலையில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கையில், 30 வருடங்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்ற 1.5 மில்லியன் பேர் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இது காலத்துக்குத் தேவையான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பெண் பிரதிநிதித்துவத்தை 30 வீதமாக உயர்த்த வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தமது நிலைப்பாட்டை குழு முன்னிலையில் தெரிவித்தது.
இது நாடாளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பேணப்பட வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள விகிதாசார முறை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என சமத்துவக் கட்சி நாடாளுமன்ற விசேட குழுவில் தெரிவித்தது.
இந்த முறையின் கீழ் சகல இனங்களுக்கும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதாகவும், ஜனநாயகத்துக்கு இது மிகவும் முக்கியமானது என்றும் அக்கட்சி தெரிவித்தது.
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சமத்துவக் கட்சி இக்குழுவின் முன் சுட்டிக்காட்டியது.
வெளிநாடுகளில் உள்ள மற்றும் இடம்பெயர்ந்துள்ள தரப்பினரின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.
தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதற்கு அவசியமான சட்டம் விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தெரிவித்தது.
தேர்தல்களைப் பின்போடுவது உசிதமானது அல்ல.
வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை காலம் தாழ்த்தாது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியத்தையும் அக்கட்சி வலியுறுத்தியது.
அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்குவதைத் தடுப்பதற்கான கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என சிங்களதீப ஜாதிக பெரமுன, நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வேறு கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான புதிய சட்டத்தை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியது.
இக்குழுவில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.