முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்ததால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானது.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. (அம்மா) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.
இதையடுத்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலை உடனே நடத்தக்கோரி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் ஐகோர்ட்டு தெரிவித்தது.
இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏராளமான போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்காமல் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்றும் ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கக்கோரி மனு கொடுத்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலில் 50, 100 ஓட்டுகள் கூட வெற்றியை தீர்மானிக்கும்’ என்றார்.
அப்போது தேர்தல் கமிஷனின் வக்கீல், ‘மனுதாரர் 44,999 வாக்காளர்களின் பெயரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார். ஆனால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி 45,819 போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். 100 சதவீதம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர்’ என்றார்.
அதற்கு மனுதாரர் வக்கீல், ‘அப்படி நீக்கப்பட்டுவிட்டால், அதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த போலி வாக்காளர்களை நீக்கம் செய்ய எங்கள் தரப்பு ‘பூத்’ முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டு நிறைவடையப்போகிறது. ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையத்தின் வக்கீல், ‘டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தினால், கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளும் ஜனவரி மாதம் வருகிறது. எனவே, இந்த பண்டிகைகளை காரணம் காட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணத்தை அரசியல் கட்சியினர் கொடுப்பார்கள். இந்த முறைகேட்டை தடுப்பது கடினம். எனவே, டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவை பரிசீலிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதை ஏற்கமுடியாது. அதனால் பண்டிகைகளை காரணம் காட்டி தேர்தலை தள்ளிப்போட முடியாது. எனவே, டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இதற்கு வசதியாக டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை முடித்துவைப்பதாக அறிவித்தனர்.