முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகரகம நகரசபை உட்பட ஆறு சபைகளுக்கான சிறிலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதனால், வேட்புமனுத் தாக்கலுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த குழுவை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறுது.
பதுளை, மகியங்கனை, அகலவத்த ஆகிய பிரதேச சபைகளுக்காகவும், மகரகம, பாணந்துறை, வெலிகம ஆகிய நகர சபைகளுக்காகவும் மகிந்த அணி தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பை ஏற்படுத்திய மகிந்தராஜபக்ச வேட்புமனு நிராகரிப்புக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.
“சிறு சிறு தவறுகளால்தான் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தை நாடினால் நிவாரணம் கிடைப்பதற்குரிய வாய்ப்பிருக்கின்றது” என்று தினேஷ் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மகிந்த, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இது சம்பந்தமாகப் பேசி தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.