தேர்தலுக்கு முன்னர் பிணை முறி அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் மறுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது எனவும், தேர்தலுக்குப் பிறகு தேவையாயின் ஒரு தினம் தரமுடியும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்ததாகவும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாளைய தினம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு மாத்திரமே இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை மறுதினம் இந்த அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து ஆராய கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த விஜித ஹேரத் எம்.பி. , மக்கள் விடுதலை முன்னணி இந்த அறிக்கை தொடர்பிலான விவாதத்தை தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.