உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உருளைக்கிழங்கு விதைக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியம் நூறு சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தேயிலை மீள்ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின் கீர்த்தி நாமத்திற்கு தற்போது சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் தேயிலைக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேயிலை மீள்ஏற்றுமதியை முற்றாகத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அத்துடன் மிளகு மீள்ஏற்றுமதியினால் மிளகின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தேசிய மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மிளகு மீள்ஏற்றுமதியையும் எதிர்காலத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நேற்று (28) பிற்பகல் பதுளை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கான பொறுப்பினை தாம் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியிடம் கையளித்திருந்ததுடன் தற்போது நாட்டுமக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அவற்றை தம்மால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதார சபையினூடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வெவ்வேறு அரசியல் கட்சிகள் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளற்ற நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சி நிரல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் மாத்திரமே காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டுக்குத் தேவையான மாற்றத்திற்கான பாதையில் சகலரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்க வேண்டுமெனத் தெரிவித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று மக்களின் தெளிவான எண்ணங்களினூடாகக் கட்டியெழுப்பப்படுவதுடன் மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளதென ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரின் பதுளை மாவட்ட மக்கள் சந்திப்பு பெருந்திரளான மக்கள் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக இன்று இடம்பெற்றது.
இதன்போது பதுளை மாவட்ட மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.