அன்று எமது பிரதான ஏற்றுமதி கைத்தொழில் துறையாக இருந்த தேயிலையை மீண்டும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு கொண்டுவருவதற்கு அரச மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடனான நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் குறித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விலியுறுத்;தியுள்ளார்.
நேற்று பிற்பகல் (08) கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் இடம்பெற்ற தேசிய தேயிலை விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் தேயிலை கைத்தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தேயிலை கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களைப் பலப்படுத்தும் நோக்குடன் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சினால் முதன் முறையாக இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உயர்ந்த நியமங்கள் மற்றும் தரத்துடன் ஏற்றுமதிக்கு பொருத்தமானவற்றை உற்பத்திசெய்யும் போது அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்குடன் சில வியாபாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை காரணமாக எமது உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையின் அங்கீகாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை பலப்படுத்தும் போது பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட ஏற்றுமதி கைத்தொழிலுக்கு முன்னுரிமையளித்து அவற்றுக்குத் தேவையான வளங்களை குறைவின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கடந்த இரண்டு வருடங்களைப் போன்று இவ்வருட வரவுசெலவுத்திட்டத்திலும் அதற்குத் தேவையான ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரித்தார்.
தேயிலை உள்ளிட்ட எமது தேசிய உற்பத்திகளை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்த முன்னெடுக்கப்படும் பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்களின் பலவீனம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இது குறித்து இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் உட்பட குறித்த துறைகளில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேயிலை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு பங்களிக்கின்ற அனைத்து தரப்பினரையும் இனங்கண்டு அவர்களது விசேட திறமைகள், பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புகளை பாராட்டும் நோக்குடன் இந்த விருது விழா ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
சிறந்த தேயிலை கொழுந்து பறிப்பவர், சிறந்த தேயிலை விநியோகஸ்தர், சிறந்த தேயிலை தோட்டம், சிறந்த தேயிலை தொழிற்சாலை, சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு 150 விருதுகள் வழங்கப்பட்டன. 25 பேர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார். இலங்கையின் தேயிலை கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு தமது வாழ்நாளில் மேற்கொண்ட சிறந்த பங்களிப்புக்காக 04 விருதுகள் வழங்கப்பட்டன.
பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது. தேயிலை கைத்தொழில் துறை மற்றும் தேயிலை சபை தொடர்பாக எழுதப்பட்ட 2 நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித், இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.