விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும், நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கவும் நியமிக்கப்பட்டிருந்த தேசிய விளையாட்டு சபையின் அதிகாரிகள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் மஹேல ஜயவர்தன தலைமையில் திங்கட்கிழமை சூம் தொழில்நுட்ப வசதியின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ஒருமித்த கருத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், குழுவின் 14 உறுப்பினர்களில் 10 இற்கும் அதிகமானோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்ததாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட தேசிய விளையாட்டுப் பேரவையின் மூன்று வருட பதவி காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் தத்தம் பதவி நிலைகளிலிருந்து விலகியுள்ளனர்.
விளையாட்டுச் சட்டத்தின் ஒரு கட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பிரிவுதான் தேசிய விளையாட்டு பேரவை என்றும் அதன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என மற்றுமொரு ஷரத்தில் கூறப்பட்டுள்ளதாக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
“அது ஒன்றும் இல்லை. ஒரு கட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்க ஒரு பிரிவு நியமிக்கப்பட்டது. இது 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று ஒரு ஷரத்தும் உள்ளது. இது பிரச்சனைக்குரியது. எப்படியோ எல்லோரும் கிளம்பினோம். புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் போது, இதே அதிகாரிகளையோ அல்லது வேறு சிலரையோ நியமிக்கலாம். தாம் விரும்பினால் தேசிய விளையாட்டுப் பேரவையை நியமிக்காதிருக்க விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உரிமை இருப்பதாகவும் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு சபையின் மற்றைய உறுப்பினராகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பணியாற்றினார். இலங்கையின் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் குமார் சங்கக்கார, ஜூலியன் போலின் , டிலந்த மாலகமுவ, ரொவன சமரசிங்க, ரஜித அம்பெமொஹெட்டே , ருவன் கெரகல, சுபுன் வீரசிங்க, யஷ்வரன் முத்தெட்டுவகம, சஞ்சீவ விக்ரமநாயக்க மற்றும் கஸ்தூரி வில்சன் ஆகியோர் ஏனைய அதிகாரிகள் ஆவர்.
நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர்பாக அவரால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் செயலிழந்துள்ளது.
அரவிந்த டி சில்வா குழுவின் தலைவராகவும், ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகவும் இருந்தனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ரொஷான் மஹாநாம சில மாதங்களுக்கு முன்னர் குழுவிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]