சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள்.
தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், பொதுத்தேர்தலின் பின்னர் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் பின்னணியில், ‘வீரகேசரி’ வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:
கேள்வி – எதிர்வரும் பொதுத்தேர்தலில் எத்தனை ஆசனங்களை வென்றெடுக்கும் எதிர்பார்ப்புடன் பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறீர்கள்?
பதில் – இம்முறை வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தெரிவுசெய்யப்படலாம். அதன்படி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் நாம் அவற்றில் 10 ஆசனங்களைக் குறிவைக்கிறோம். கட்சியை வளர்ப்பதும், நாங்கள் அறுதிப்பெரும்பான்மை எடுத்துவிட்டோம் என்று காண்பிப்பதும் அதற்குக் காரணம் அல்ல.
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையுடன் ஸ்தம்பிதமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறிப்பிட்டிருந்தார்.
அந்த இடைக்கால அறிக்கையானது மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கியதாகவே அமைந்திருந்தது. தமிழிலும், சிங்களத்திலும் ‘ஏக்கிய இராச்சிய’ என்ற சொற்பதம் தான் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அச்சொல்லுக்கான தமிழ் சொற்பதம் ‘ஒற்றையாட்சி’ என்பதாகும்.
அதற்கு நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக ஏற்கனவே வலுவானதொரு அர்த்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இப்புதிய அரசியலமைப்பின் ஊடாகவும் ‘ஏக்கிய இராச்சிய’ என்ற ‘ஒற்றையாட்சி’ முறைமையே தொடரப்போகிறது. அதனைத் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் மூடிமறைக்கும் நோக்கில் ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ் சொற்பதத்தைப் பிரயோகித்து, ஏமாற்றுவதற்கான முயற்சியொன்றைத் தமிழரசுக்கட்சி முன்னெடுத்திருந்தது. எனவே இந்த நடவடிக்கையைத் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முடிவுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒற்றையாட்சியை உள்ளடக்கிய இப்புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கவில்லை. ஆனால் அவ்வேளையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் அம்முயற்சிக்கு ஆதரவளித்தன.
தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமே தேவையில்லை என்று கூறியிருக்கிறார். எனவே வரப்போகிற பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்கையில், அதனை வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்துவிட்டால்,
அதற்குப்பிறகு இனப்பிரச்சினையொன்று நிலவுவதாக எப்போதும் பேசமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதுவரையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பையும் தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்பதனாலேயே போர் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் இனப்பிரச்சினை குறித்துப் பேசுகிறோம்.
ஆகவே ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு ஏதுவான புதிய அரசியலமைப்பை தமிழ் மக்களின் அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரிப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று அம்முயற்சியைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கே வாக்களிக்கவேண்டும்.
கேள்வி – அவ்வாறெனில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஆட்சிபீடமேறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்பதாகவே, அவர்களது ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிட்டாது என்ற தீர்மானத்தை எடுத்துவிட்டீர்களா? அந்தத் தீர்மானத்தை எம்முடன் பேசுவதற்கு முன்பதாக அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். எனவே தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன.
‘அரகலய’ போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்தின் வசமிருந்தது. அப்போது தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்த்தர்களான ஹரினி அமரசூரிய மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் எம்மைச் சந்தித்தனர். அப்போது அவர்களது நிலைப்பாடுகள் கணிசமானளவு முற்போக்கு அடிப்படைகளைக் கொண்டிருந்த போதிலும், அரசியல் விவகாரங்கள் அனைத்தும் மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அதில் தம்மால் ஆதிக்கம் செலுத்தமுடியாதிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் தீர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் நாம் பங்கேற்காமைக்குக் காரணம் அது மக்களால் ஆணை வழங்கப்படாத ஜனநாயக விரோத ஆட்சி என்பதேயாகும். அவ்வேளையில் மக்களே கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் எவ்வாறெனினும் சிங்கள தேசத்துடன் தான் பேசவேண்டும். ஆனால் அச்சிங்கள மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு அரசாங்கத்துடன் நாம் பேசுவதென்பது, அம்மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகவே அமையும். என்னைப் பொறுத்தமட்டில் சிங்கள மக்களுக்குத் துரோகமிழைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்துப் பேசுவது முட்டாள்த்தனமான செயற்பாடாகும்.
இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை இல்லை என்று நாங்கள் கூறவரவில்லை. ஆனால் காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். அதன் பின்னரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோமாயின், நாமும் அவர்களது நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவே கருதப்படும். ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். வட, கிழக்கில் அவர்களை எதிர்த்துத்தான் நாம் எம்முடைய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
கேள்வி – ஆக, தென்னிலங்கை சிங்கள அரசாங்கத்துடன் பேசித்தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெறமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?க்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைக் கண்டடைவதற்கும், ஒரே நாட்டுக்குள் இரு தேசங்கள் ஒன்றாக இருப்பதற்கும் அவர்களுடன் பேசித்தான் ஆகவேண்டும்.
அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அப்பேச்சுவார்த்தை மூலம் எவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரப்போகிறீர்கள் என்பது தான் முக்கியமானது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு நாம் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியும்.
கடந்த காலங்களில் இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் தேவைப்பாடுகளுக்கு ஏற்றவாறு செயற்படக்கூடிய அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது, அந்நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஓரளவுக்குத் தளர்வாகப் பேசினர். பின்னர் அந்நாடுகள் வலியுறுத்தும்போது காட்டமாகப் பேசினார்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் விளையவில்லை. ஆகையினாலேயே இதுவரை தாம் ஆணை வழங்கிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் என அடையாளப்படுத்தப்படும் தரப்புகள் மீது தமிழ் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
கேள்வி – உங்களது கட்சி உட்பட?
பதில் – எம்முடைய கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. இதுவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமே தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தான் எமக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. நாங்கள் அவ்விரண்டு ஆசனங்களை வெல்வதற்கு முன்னரும், வென்றதன் பின்னரும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
அதற்கு முன்னர் இனப்படுகொலை, சமஷ்டி, தமிழ்த்தேசம் போன்ற வார்த்தைகளையே உச்சரிக்காதவர்கள், இப்போது அவ்வார்த்தைகளின்றி தமிழ்மக்கள் மத்தியில் செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர். அந்த மாற்றத்துக்கு அடித்தளம் இட்டவர்கள் நாங்கள் தான். எனவே தமிழர் நலனை முன்னிறுத்திய பேரம் பேசலை முன்னெடுப்பதற்கு இம்முறை தேர்தலில் மக்கள் எமக்கு ஒரு வாய்ப்பளித்தே ஆகவேண்டும்.
கேள்வி – வட, கிழக்கில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களுடன் மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், அடுத்துவரும் பாராளுமன்றப் பதவிக்காலத்துக்குள் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்ற உத்தரவாதத்தை வழங்குவீர்களா?
பதில் – இங்கு இரண்டு விடயங்கள் மிகமுக்கியமானவை. முதலாவது எமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நகர்வுகளை முழுமையாகத் தடுக்கவேண்டும். ஆகக்குறைந்தபட்சம், அந்நகர்வுகள் எம்முடைய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். அதற்கு அப்பால் தமிழ் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம்.
கேள்வி – இருப்பினும் ஜனாதிபதித்தேர்தலின்போது தேசிய ரீதியில் எழுச்சியடைந்த மாற்றத்துக்கான கோஷம், வட, கிழக்கு மாகாணங்களிலும் எதிரொலிப்பதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, அவர்கள் சிங்கள தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடிய நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இம்மாற்றத்தின் எதிர்கால சவால்களை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்?
பதில் – எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அதுவொரு திட்டமிட்ட கருத்துருவாக்கமே தவிர, உண்மையான களநிலைவரம் அதுவல்ல. குறிப்பாக நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வட, கிழக்கு மாகாணங்களில் குறைந்தளவு வாக்குகளைப்பெற்று கடைசி இடத்திலேயே இருந்தார்.
கேள்வி – ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு சிங்கள தேசிய கட்சியல்லவா? வட, கிழக்கு மாகாணங்களில் அக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தானே முன்னிலையில் இருந்தார்?
பதில் – ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு ஒரு பாரம்பரிய தமிழ்த்தேசிய கட்சி தான் கேட்டுக்கொண்டது. அதேபோன்று தமிழ்மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் பார்க்கும் விதத்தில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
ஏனெனில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அதனைத் தத்துவார்த்த ரீதியாக நியாயப்படுத்துவதில் மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவும், ஜாதிக ஹெல உறுமயவுமே முக்கிய பங்காற்றினர். வட, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரிப்பதற்கு முன்நின்று செயற்பட்டார்கள்.
போரின் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு விடயத்திலேனும் மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்ததா? எனவே தமிழ் மக்கள் அதன் நீட்சியாகவே தேசிய மக்கள் சக்தியைப் பார்க்கிறார்கள். எனவே அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா எனும் தெரிவுகளில், தமிழர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
கேள்வி – ஆக, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்?
பதில் – ஏனைய பழக்கப்பட்ட அரசியல் கலாசாரத்திலிருந்து மாறுபட்டு நாம் எம்மைக் கட்டமைத்து வெளிப்படுத்திவரும் தமிழ்மக்கள் மைய அரசியல் கலாசாரம், தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் என அடையாளப்படுத்தப்பட்ட தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்கு எதிரான எமது நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள், நேரடியாகவும், தமிழ்மக்களின் நிதியுதவி மூலமும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்துவரும் உதவிகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கலாக நாம் நீண்டகாலமாக தமிழ்மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே செயலாற்றிவருகிறோம். இவற்றின் அடிப்படையில் தமிழ்மக்கள் எமக்கு வாக்களிக்கவேண்டும்.