தெற்கு கரோலினா துப்பாக்கிச் சூடு : சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஆரம்ப பாடசாலையருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவன், நேற்று (சனிக் கிழமை) உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன் கிழமை 14 வயதான சிறுவன், 47 வயதான தன் தந்தையை சுட்டுக் கொன்று விட்டு, அவனது வீட்டிலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் அமைந்திருந்த ஆரம்ப பாடசாலைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
இதில் இரு மாணவர்களும், ஆசிரியரும் காயமடைந்தனர். இவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜேக்கப் ஹால் என்ற 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த சிறுவன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான். இத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலா அல்லது இனவெறித் தாக்குதலா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.