இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் அண்மையில் (26) நடைபெற்று முடிந்த தெற்காசிய நகர்வல ஓட்டப்போட்டியில் இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மூன்று பதக்கங்களை வென்றெடுத்தனர். மேலும், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் உப சம்பியன் பட்டத்தையும் இலங்கை கைப்பற்றியது.
ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் போட்டியிட்டிருந்த சமன்த்த புஷ்பகுமார வெள்ளிப் பதக்கத்தை வென்றார். புஷ்பகுமார 33 நிமிடங்கள் 12.03 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியாவின் தர்ஷன் சிங் வென்றிருந்தார். அவர் போட்டித் தூரத்தை 31 நிமிடங்கள் 08 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்த நேபாளத்தின் முகேஷ் பஹதுர் 34 நிமிடங்களில் 08 செக்கன்களில் ஓடி முடித்தார்.
பெண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் போட்டியிட்டிருந்த சுஜானி மதுமாலி பெரேரா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவர் சாதனை நேரம் 39 நிமிடங்கள் 54 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். இதன் தங்கப் பதக்கத்தை இந்தியாவின் வர்ஷா தேவியும் (37 நிமி.14 செக்.) வெள்ளிப் பதக்கத்தை நேபாளத்தின் பச்சி ராஜ்புரா (38 நிமி.48 செக்.) வென்றெடுத்தனர்.
கனிஷ்ட 20 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்ட ஜாலிய சங்கீத் மதுஷான் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். இவர் போட்டித் தூரத்தை 29 நிமிடங்கள் 24 செக்கன்களில் முடித்திருந்தார். இதில் இந்தியாவின் ஆகாஷ் பட்டேல் (25 நிமி.50 செக்.) தங்கப் பதக்கத்தையும் நேபாளத்தின் கார்கி பாதல் (25 நிமி.50 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியிருந்தனர்.
சிரேஷ்ட பிரிவினருக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியானது 10 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாகவும், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் கனிஷ்ட போட்டி 8 கிலோ மீற்றர் தூரமாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]