தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இத்திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில், 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி, 50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் என்பவற்றுக்கான வசதிகள் அமையப்பெற்றுள்ளன.
கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களுக்கு எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியவாறு தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும்.
இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும். உலகில் 18 ஆவது உயர்ந்த கோபுரமாக இது காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.