தெமட்டகொடயில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட குழுவொன்று அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கென, குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் பலரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, நேற்று முன்தினம் ஏற்பட்ட இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, கோட்டை மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
தெமட்டகொடையிலுள்ள பெற்றோலிய வள அமைச்சுக்குள் முறையற்ற விதத்தில் உள்நுழைந்தமை, தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சிறு காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அர்ஜூன ரணதுங்க நேற்று மாலை கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்த அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பெற்றோலிய வள அமைச்சு வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வந்தபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதன்போது, அவரின் மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.