தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரோஷமான விரிவாக்கக் கொள்கைக்கு எதிராக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நோபூ கிஷி கேட்டுக் கொண்டார்.
பான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான உபகுழுவில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
தென் சீனக் கடலில் காணப்படும் சிறுசிறு நிலப்பரப்புகளை சீனா தொடர்ந்து இராணுவமயமாக்குகிறது. சீனா அங்கு இராணுவ வசதிகளை உருவாக்கி முகாம்களை அமைத்து வருகிறது.
அது மட்டுமல்லாமல், இராணுவமாயமாக்கும் உட்கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகின்றது. விசேடமாக ஓடுபாதைகள், துறைமுக வசதிகள், ராடார் வசதிகள் உள்ளிட்டவற்றை அங்கு கட்டமைத்து வருகின்றது.
அதுமட்டுமன்றி அந்த நிலப்பரப்புகளில் சீனா சுழற்சி முறையில் ரோந்து விமானங்களையும், எச்சரிக்கை விமானங்களையும் இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் கப்பல் மேற்பரப்பில் இருந்து விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் வான்வெளியில் ஏவுகணைகளை முறியடிக்கும் வகையிலான ஏவுகணைகள் ஆகியனவும் அந்த நிலப்பரப்புக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தவிர, சீனா அடிக்கடி இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இடைப்பட்ட காலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவி பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஜப்பானைப் பொறுத்தவரையில் தென் சீனக் கடலில் சட்டத்தின் ஆட்சியை ஆதரிப்பதையே நிலையான நிலைப்பாடாக கொண்டுள்ளது.
இதற்கான முயற்சியாக, தொலைபேசி மற்றும் காணொளி மாநாடுகளின்போது ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு மேற்குறிப்பிட்ட விடயங்களை வெளிப்படுத்தி ஜப்பானின் கவலைகளை தெரிவித்திருக்கின்றேன்.
குறிப்பாக எமது கவலைகளை உக்ரைன் போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அமெரிக்கா மற்றும் அவஸ்திரேலியாவும் எமது கவலைகளை உணர்ந்து கொண்டுள்ளன. இதுவொரு முதற்படியாகும்.
மேலும், சீனா-தாய்வான் உறவைப் பொறுத்தவரை, தொடர்புடைய தரப்புக்களின் நேரடி உரையாடல்கள் மூலம் அமைதியாக தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஜப்பானின் நிலைப்பாடாகும். அவ்வாறு நடக்கின்றபோது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு வித்திடுவதாக இருக்கும். எவ்வாறாயினும் பல அண்டை நாடுகளுக்கு எதிராக சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மோதல் அச்சத்தைத் தூண்டியுள்ளது. இதுசம்பந்தமாக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கரிசணை கொள்ள வேண்டும் என்றார்.