தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த இரு அணிகளிடையே இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 112 ரன்களையும், அலஸ்டர் குக் 88 ரன்களையும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸை ஆடவந்தது. இங்கிலாந்து அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ரோலண்ட் ஜோன்ஸின் (5 விக்கெட்) பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க அணி திணறியது. இதனால் 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்திருந்தது. பவுமா 34 ரன்களுடனும், மோர்கெல் 2 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணி, கவுரவமான ஸ்கோரை எட்ட போராடியது. அந்த அணியின் பவுமா 120 பந்துகளில் 52 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உதவியாக மோர்கெல் 17, பிலாண்டர் 10 ரன்களைச் சேர்க்க, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்ரிக்க அணியை விட முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி, 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான குக் 7 ரன்களில் அவுட் ஆனபோதிலும், ஜென்னிங்ஸ் (34 ரன்கள்), வெஸ்லி (28 ரன்கள்) ஆகியோரின் ஆட்டத்தால் 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எட்டியது. இந்நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழையால் ஆட்டம் தடைபட்டபோது இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை விட 252 ரன்கள் முன்னணியில் இருந்தது. அந்த அணியின் வசம் மேலும் 9 விக்கெட்கள் இருந்தன.