தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 ஆகிய இரண்டு வகையான தொடர்களுக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியையும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.
22 பேர் கொண்ட குழாமில் சிரேஷ்ட வீரரான தினேஷ் சந்திமால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், காயத்தால் அவதிப்பட்டு வரும் குசல் ஜனித் பெரேராவுக்கு இந்த குழாத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் நடைபெற்று முடிந்த இன்விடேஷனல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயற்பட்ட கமிந்து மெண்டிஸ், புலின தரங்க, லஹிரு மதுஷங்க, மதீஷ தீக்சன ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய ஹிமேஷ ராமநாயக்கவுக்கு குழாமில் இடம் கிடைக்காதமை ஏமாற்றமாகும்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தசுன் ஷானக்கவின் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்தில், தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக்க, ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ண,நுவன் பிரதீப், பினுர பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, அக்கில தனஞ்சய,பிரவீன் ஜயவிக்ரம,லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, புலின தரங்க, மஹீஷ் தீக்சன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 2ஆம் திகதியன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.