தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
அந்தவகையில் நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அண் சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 118 ஓட்டங்களையும் சரித் அசலன்க 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
301 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எய்டன் மக்ரம் 96 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் அகில தனஞ்சய 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.