கடந்த 2016ம் ஆண்டில் தாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில், 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை குடும்ப சுகாதார அலுவலக பணிப்பாளர் வைத்தியர் பிரியானி சேனாதீர மற்றும் சமூக வைத்திய நிபுணர் கபில ஜெயரத்னவால் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவாகியுள்ள போதிலும் நேரடியான தாய் மரணங்கள் இவ் வருடம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான காரணமாக பிரசவத்தின் பின்னரான இரத்தப் போக்கு மற்றும் இதயக் கோளாறு என்பன தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 43 வீதமான தாய் மரணங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளாமையால் ஏற்பட்டுள்ளதாகவும் 20 மரணங்கள் குடும்பத்தினரின் உரிய பராமரிப்பு இல்லாமல் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சுகாதார பணியாளர்களின் தாமதங்கள் காரணமாக 44 தாய் மரணங்கள் ஏற்பட நேரடி மற்றும் மறைமுக காரணங்களாக அமைந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.