தென்கொரியாவுக்கு தொழிலுக்கு சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக 3மாத பொது மன்னிப்பு காலத்தை கொரிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தென்கொரியாவுக்கு தொழிலுக்கு சென்று தொழில் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறும் வகையில் 3மாத கால பொது மன்னிப்பை தென்கொரிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. குறித்த பொது மன்னிப்பு காலம் இந்த மாதம் 10ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.
அத்துடன் இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்திக்கொண்டு மீண்டும் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள், சட்டவிரோதமாக கொரியாவில் தங்கியிருந்த காரணத்துக்காக இலங்கையில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து அவர்களை விடுதலையாக்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை 1983 இலங்கை தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, 20 இலட்சம் ரூபா பிணைமுறியை பெற்றுக்கொள்வதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இதேவேளை, இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், கொரிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள இந்த பொது மன்னிப்பு காலப்பகுதியை பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக அங்கு தங்கியிருக்கும் தொழிலாளர்கள் நாட்டுக்குவர நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்கள் இந்த காலப்பகுதில் நாட்டுக்கு திரும்பாமல் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தால், அவர்களுக்கு எதிராக பணியகம் சட்ட நடடிக்கை எடுக்க நேரிடும்.
அத்துடன் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தங்கள் உறவினர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தி, அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.