கிழக்கில் உதயமாகவுள்ளதாக கூறப்படும் முஸ்லிம் கூட்டமைப்பில் தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று உள்வாங்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் உட்பட பலர் இறங்கியுள்ளனர்.
தற்போது கிராமங்கள் தோறும் செயற்குழு உறுப்பினர்களை உள்வாங்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாறையில் இந்நடவடிக்கை நடைபெற்றுவருகிறது. அடுத்தவாரம் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பு ஒரு மாதகாலத்தில் பொதுமாநாடு நடாத்தப்பட்டு கட்சியின் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இது தொடர்பில் எம்.ரி.ஹசன் அலி விளக்கமளிக்கையில்; தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஒருவர் இருக்கமாட்டார்.
தலைமைத்துவ சபையே இயங்கும். யாப்பு; குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்டே வரையப்படும். செயலாளர் பதவி வகிப்பவர் தொடர்ந்து பல காலம் அப்பதவியில் இருக்கமாட்டார். இப்பதவிக்கு ஒவ்வொரு முறையும் ஒருவர் நியமிக்கப்படுவார். செயலாளர் பதவி நியமனத்தை கட்சியின் உயர்பீடமே தீர்மானிக்கும் என்றார்.