பாரிய வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் துாங்குவதால் ஏற்படும் விபத்துகள் அதிகம். ஓட்டுனரின் கண்கள் சொக்க ஆரம்பிப்பதற்கு முன், அவரை எச்சரிக்க முடிந்தால் விபத்துகளை தடுக்க முடியும்.
இதற்கென, ‘போர்டு மோட்டார்’ (ford motor co)நிறுவனம், ஒரு தொப்பியை வடிவமைத்து இருக்கிறது. ‘முன்னெச்சரிக்கை தொப்பி,’ (safe cap) என்ற இத்தொப்பியில், அசையும் கோணத்தை அளக்கும் கைரோஸ்கோப் மற்றும் வேகத்தை அளக்கும் ஆக்செலரோ மீட்டர் மற்றும் உணரிகள் போன்ற கருவிகள் உள்ளன.
விழித்த நிலையில் வாகனம் ஓட்டுபவரின் தலை, கழுத்து, தோள்பட்டை ஆகியவை எப்படி அசையும் என்பதை, போர்டு பொறியாளர்கள் பதிவு செய்தனர். இந்த அசைவுகளுக்கு மாறாக, ஓட்டுனரின் அசைவு இருக்கும் பட்சத்தில் தொப்பியில் உள்ள உணரிகளும், கருவிகளும் அதை கண்டு ஓட்டுனரை எச்சரிக்கும்.
உதாரணமாக, ஒருவர் துாக்க நிலைக்குப் போவதற்கு சற்று முன், அவரது கழுத்துத் தசைகள் இளக்கமடைய ஆரம்பிக்கும், இதை உணர்ந்து, முன்னெச்சரிக்கை தொப்பி, ஓட்டுனரை எச்சரிக்கும். முதலில் ஒலி எழுப்பும், அடுத்து அதிக வெளிச்சம் மற்றும் அதிர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் ஓட்டுனர் துாங்கப் போவதை தடுக்க முடியும்.
இந்த முன்னெச்சரிக்கை தொப்பியை, 2018ல், போர்டு நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.