டி.என்.பி.எல்., தொடரில் பங்கேற்கும் டியூட்டி பாட்ரியாட்ஸ் அணியின்(துாத்துக்குடி) அதிகாரப்பூர்வ துாதராக பாலாஜி நியமிக்கப்பட்டார்.
இந்திய அணி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி. கடந்த 2004ல் பாகிஸ்தான் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அசத்தினார். மொத்தம் 3 போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தி, இந்தியா 2–1 என தொடரை வெல்ல உதவினார். 2005ல் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்ட இவர் 4 ஆண்டுகளுக்குப்பின், 2009ல் சர்வதேச அரங்கிற்கு திரும்பினார். பேட்ஸ்மேன்களை தனது அசுர ‘வேகத்தால்’ திணறடித்த சென்னை மண்ணின் மைந்தனான பாலாஜி, கடைசியாக இந்திய அணிக்காக கொழும்பு ‘டுவென்டி–20’யில் (எதிர்– தென் ஆப்ரிக்கா, 2012) விளையாடினார்.
பின், உள்ளூர் போட்டியில் பங்கேற்ற இவர், கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,.) தொடரில் துாத்துக்குடி அணிக்காக விளையாடினார்.
துாத்துக்குடி அணி உரிமையாளர் ஆல்பர்ட் முரளிதரன் கூறுகையில்,‘‘ டி.என்.பி.எல்.,. தொடரின் முதல் ‘சீசனில்’ எங்கள் அணியில் பாலாஜி முக்கிய பங்காற்றினார். வீரர்களை ஒன்றிணைத்து வழிநடத்தினார்,’’ என்றார்.
அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் பாலாஜி ஓய்வு பெற்றுவிட்டார். இளம் வீரர்களுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து, அவர்களை வழிநடத்தும் எண்ணத்தில் உள்ளார். ‘புன்னகை அரசனான’ இவர் துாத்துக்குடி அணியின் அதிகாரப்பூர்வ விளம்பர துாதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.