துருக்கியின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மேலும் டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை கருங்கடல் கடலோர மாகாணங்களான பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து வீழ்ந்ததுடன், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இப்பகுதி முழுவதும் 1,700 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
அவர்களில் பலர் தற்காலிகமாக மாணவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
பார்டின் மாகாணத்தில், ஒரு பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர். மொத்தத்தில், ஐந்து பாலங்கள் வெள்ளத்தில் சரிந்ததுடன் மேலும் இரு பாலங்கள் சேதமடைந்த. டஜன் கணக்கான கிராமங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளன மற்றும் பல சாலைகளின் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
குறைந்தது 4,500 பணியாளர்கள், 19 ஹெலிகாப்டர்கள் மற்றும் 24 படகுகள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கியின் கருங்கடல் பகுதி கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடந்த மாதம் கிழக்கு கருங்கடல் கடற்கரை மாகாணமான ரைஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.