துருக்கியில் கைதான கனேடியர்களை மீட்கும் முயற்சிகள் தோல்வி
இந்த மாத ஆரம்பத்தில் தோல்வியடைந்த துருக்கியின் இராணுவப் சதிப்புரட்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு கனேடியர்களையும் மீட்கும் கனேடிய அரசின் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
கடந்த 15 ஆம் திகதி துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவு வழங்கியதாக கடந்த வாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துருக்கிய அரசால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தாவீது ஹான்சி மற்றும் இல்ஹான் ஏர்டெம் ஆகிய இரு கனேடியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனிதனியாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் துருக்கியுள்ள கனேடிய அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கைது செய்யப்பட்ட இரு கனேடியர்களின் குடும்பங்களுக்கும் தூதரக உதவிகளை வழங்கியுள்ளதாக தனியுரிமை சட்டங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கைது செய்யப்பட்ட இரு கனேடியர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை என அரச அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
குறித்த இரு கனேடியர்களும் துருக்கியில் பிறந்தவர்கள் எனினும் கனேடிய குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹான்சி கல்கரியில் வசிப்பவர் எனவும் ஏர்டெம் ரொறன்ரோ மற்றும் ஒட்டாவாவில் வசித்தவர் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த இருவரும் இரட்டை குடியுரிமையை கொண்டிருப்பதாலும் அவர்களது சொந்த நாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாலும் கனேடிய அதிகாரிகள் அவர்களுக்கு உதவிபுரிவது சிரமம் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் இதுபோன்ற இரட்டைக் குடியுரிமை அங்கீகரிக்க முடியாது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
துருக்கியில் இரட்டை குடியுரிமைக்கு அங்கீகாரம் உண்டு எனினும் இரட்டை குடியுரிமை உடையவர்கள் துருக்கியில் கைது செய்யப்படும் போது அவர்கள் குடியுரிமைபெற்ற மற்ற நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குறித்த இரு கனேடியர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு கனேடிய தூதரக அதிகாரிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.