துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை இருபது நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!
கனடாவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்று 20 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரொறொன்றோ நகருக்கு அருகில் உள்ள Mississauga நகரில் Candice Rochelle Bobb(35) என்ற பெண் வசித்து வந்துள்ளார்.
20 வாரங்கள் கர்ப்பிணியான இவர் கடந்த மே 15ம் திகதி நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு காரில் திரும்பியுள்ளார்.
நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த அந்த கார் ஓரிடத்திற்கு வந்தபோது, கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கி சூடு கர்ப்பிணி பெண்ணை குறிவைத்து நடத்தப்பட்டதா? அல்லது நண்பர்களை குறிவைத்து நடத்தப்பட்டதா? என்பது இதுவரை தெரியவரவில்லை.
இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணின் மார்பு மீது குண்டு பாய்ந்ததால், அவரை அபாயநிலையில் பொலிசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிரமாக மருத்துவர்கள் போராடியும் கர்ப்பிணி உயிர் பிழைக்கவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
பிரசவம் ஆன நாள் முதல் அந்த ஆண் குழந்தை தீவிர கண்காணிப்பிலும் முழு மருத்துவ பரிசோதனையிலும் இருந்து வந்துள்ளது.
சுமார் 20 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அந்த ஆண் குழந்தை நேற்று மாலை உயிரிழந்துள்ளது.
இதனை குழந்தையின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதுடன், இந்த சோகமான தருணத்தில் ஊடகங்கள் எங்களை தொடர்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.