தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்தவர் தாக்கி விட்டு தப்பிச் சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்துள்ள சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
மருதங்கேணியில் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது,
நாம் மருதங்கேணியில் உள்ள விளையாட்டுக்கழகமொன்றின் இளைஞர்களுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்காகச் சென்றிருந்தோம்.
அதன்போது சிவில் உடை தரித்த இனம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு தொலைபேசி மூலம் இளைஞர்களுடனான எமது கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்வதற்கு முனைந்து கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் எனது, ஆய்வு உத்தியோகத்தர் அவர்களிடத்தில் விபரங்களை கோர முற்பட்டபோது அவர்கள் தகவல்களை வெளியிடவில்லை.
அச்சமயத்தில் நான் உள்ளிட்டவர்களும் அவர்கள் யார் என்பதை கோருவதற்கு முனைந்தவேளையில் அவர்கள் தமது அடையாளத்தினை வெளிப்படுத்தவில்லை.
ஒருகட்டத்தில் தம்மை புலனாய்வுப்பிரிவினர் என்று தெரிவித்தபோதும், அவர்கள் அதற்கான அடையாளத்தினைக் காண்பிக்கவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக எம்முடன் தர்க்கம் செய்தனர்.
இந்நிலையில் அவர்களின் ஒருவர் என்னை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்த நிலையில் மற்றவரை நாம் சுற்றிவளைத்திருந்தோம். தொடர்ந்து அவர் பொலிஸாருடன் தொலைபேசி வழியாக உரையாடினார்.
இதற்குள் அருகிலிருந்த பாடாசலையில் இருந்து வருகை தந்த சிவில் உடைதரித்த ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தரும்ரூபவ் நாம் தடுத்து வைத்தருந்த நபரை விடுமாறு கோரி மோசமான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தினர்.
அதற்குள், ஒருவர் என்னை துப்பாக்கியால் இலக்குவைத்து குறித்த நபரை விடுவிக்குமாறு கோரினார். அச்சமயத்தில் அங்கு வருகை தந்திருந்த பொலிஸ் உபபரிசோதகர் தரமுறைய ஏ.ஈ.ஜயதிஸ்ஸ என்பவர் தானே அப்பகுதிக்கான பொலிஸ் நிலைய பதில் அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் அவர்கள் புலனாய்வுப்பிரிவினர் என்றும் அவர்களை விடுவிக்குமாறும் கோரினார்.
எனினும், என்மீது தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றவரை வரவழைத்து நடவடிக்கைளை எடுக்கும் வரையில் தடுத்து வைத்துள்ளவரை விடுவிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டோம்.
இதனால் தர்க்கமான சூழல் எழுந்ததோடு, பின்னர் என்னை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டது.
அத்துடன் குறித்த அதிகாரி, புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களுக்கு தண்டனையாக இடமாற்றத்தினை வழங்குவதாகவும் அத்துடன் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் விடயத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் கோரினார்.
எனினும், அதனை மறுதலித்த நான், குறித்த சம்பவத்தினால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறி அங்கிருந்து வெளியேறினோம் என்றார்.






